For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமான விபத்தில் நடிகை செளந்தர்யா சாவு

By Staff
Google Oneindia Tamil News

Soundaryaபெங்களூர்:

பா.ஜ.கவுக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற நடிகை செளந்தர்யா விமான விபத்தில் பலியானார். உடன் சென்றஅவரது சகோதரர் அமர்நாத் உள்பட மேலும் இருவரும் பலியாயினர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த செளந்தர்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீதர்என்பவருடன் திருமணம் நடந்தது.

32 வயதான செளந்தர்யா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.திருமணத்துக்குப் பிறகும் மதுமதி உள்ளிட்ட தமிழ், கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகை, நடிகையர்கள் களமிறங்கியுள்ளநிலையில் செளந்தர்யாவும் சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். அக் கட்சிக்காக கர்நாடகத்தில் தீவிரப் பிரச்சாரம்செய்து வந்தார். நேற்று பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

இந் நிலையில் ஆந்திர மாநிலம் கரீம்நகரில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காகஇன்று காலை 11.05 மணிக்கு பெங்களூரில் இருந்து 4 பேர் அமர்ந்து செல்லக்கூடிய செஸ்னா- 180 ரக சிறியவிமானத்தில் கிளம்பினார். உடன் அவரது சகோதரர் அமர்நாத் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரும் சென்றனர்.

Cessna-180

சுக்குநூறாய் சிதறிக் கிடக்கும் செஸ்னா விமானம்
அக்னி ஏவியேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தை பா.ஜ.க. வாடகைக்கு எடுத்திருந்தது.

காலை பெங்களூர் புறநகரில் உள்ள ஜக்கூர் ராணுவ விமான தளத்தில் இருந்து அந்த விமானம் ஆந்திராவுக்குப்புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அதில் தீப் பிடித்துக் கொண்டது.

இதையடுத்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்து மிக வேகமாகத் தரையில் மோதி விமானம் வெடித்துச் சிதறியது.விமான தளத்துக்குள்ளேயே அந்த விபத்து நடந்தது. இதில் செளந்தர்யா, அமர்நாத், விமானி ஜாய் பிலிப்ஸ்,ரமேஷ் சதன் என்ற பா.ஜ.க பிரமுகர் ஆகிய நால்வரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

நான்கு பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து, சிதைந்து போய்விட்டதாக கர்நாடககாவல்துறை டிஜிபி மடியாள் தெரிவித்துள்ளர்.

Soundarya and Rajini in Padaiyappa

படையப்பாவில் ரஜினியுடன் செளந்தர்யா
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் 30 நிமிடங்கள் போராடித் தான் தீயை அணைக்க முடிந்தது.

விபத்தில் விமானமும் சுக்குநூறாகி, முழுவதுமாக எரிந்து போனது. தரையில் மோதிய வேகத்தின் அதன் கதவு 15அடி தூரத்தில் பிய்ந்து போய் விழுந்தது.

ரஜினியுடன் படையப்பாவில் நடித்து தமிழில் பிரபலமான செளந்தர்யா, தனது சொந்த மொழியான கன்னடத்தில்நிறைய படங்களில் நடித்துள்ளார். கார்த்திக்குடன் பொன்னுமணி, விஜய்காந்துடன் தவசி, சொக்கத்தங்கம்,ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, கமலுடன் காதலா.. காதலா.., பார்த்திபனுடன் இவன் ஆகிய படங்களில்நடித்துள்ளார். மதுமதி என்ற மாயாஜால படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

மொத்தம் நான்கு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தயாரித்த துவீபா என்ற கன்னடபடம் கடந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Cessna-180 single engine aircraft
Cessna-180 single engine aircraft
12 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்புக்கள் வரவேபடிப்பை விட்டுவிட்டு நடிகையானவர் செளந்தர்யா. அவரது நிஜப் பெயர் செளம்யா.

இன்றைய விபத்து குறித்து அறிந்தவுடன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அனந்த்குமார்ஆகியோர் பிரச்சாரப் பணிகளை நிறுத்திவிட்டு சம்பவம் நடந்த விமான தளத்துக்கு விரைந்து வந்துபார்வையிட்டனர்.

செளந்தர்யாவின் மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே விபத்து குறித்து விமானத்துறை இயக்குனரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விமானம்பாண்டிச்சேரியைச் சேர்ந்த நெக்சஸ் கம்ப்யூட்டர் நிறுவனத்திடம் இருந்து அக்னி ஏவியேசன் நிறுவனத்தால்வாங்கப்பட்டு வாடகைக்கு இயக்கப்பட்டு வந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X